ஓபிஎஸ்-க்கு விதித்த தடை செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என இபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதன்பின், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சூழலில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என தீர்ப்பு வழங்கி, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த தீர்ப்பு மூலம், தனி நீதிபதி தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை தொடரும். மேலும், சம்பந்தப்பட்ட தனி நீதிபதியை அணுகி நிவாரணம் பெற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்