#LIVE: வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு.! முழு விவரம் உள்ளே..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் 2022-23- ஆம் ஆண்டுக்கான முழுமையான காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில், கல்வி, மருத்துவம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசு சார்பில் வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது முறையாக தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான தனி வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

வேளாண் பட்ஜெட்டில் பல புதிய சலுகைகளும், அறிவிப்புகளும் வரும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளனர். புதிய உழவர் சந்தைகள், இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம், பாரம்பரிய ரகங்கள் சாகுபடிக்கு முக்கியத்துவம், பயிர்க்கடன் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுமென நம்பிக்கையுடன் தமிழக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

#AgriBudget2022 – 2022- 2022-2023ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்:

  • வேளாண் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். 1 மணி 55 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை அவர் வாசித்துள்ளார்.
  • வேளாண் பட்ஜெட்டில் சொல்லப்பட்ட திட்டங்கள் வாழை மரங்கள் அல்ல ஆலமரங்கள். சொற்ப காலத்தில் பலன் தராது கற்ப காலம் முடிந்து பலன் தரும் வகையிலான தொலைநோக்கு திட்டங்கள் என அமைச்சர் பேச்சு.
  • வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த ஆண்டை விட ரூ.231.9 கோடி அதிகம். (2021-22ம் ஆண்டின் திருந்திய மதிப்பீடு – ரூ.32,775.78 கோடி)
  • விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும்போது, தங்கள் பங்களிப்பு தொகையினை இ-சலான், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை (UPI) மூலம் செலுத்த வழிவகை.
  • நெல் அறுவடைக்குப் பின், பயறு வகைகள் சாகுபடியினை ஊக்கப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் கூடுதலாக 13,000 மெட்ரிக் டன் பயறு உற்பத்தி செய்யப்படும்.
  • தமிழகத்தில் மரம் வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு.
  • வேளான் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பனைமரம் ஏறும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் 75% மானியத்தில் வழங்கப்படும். பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும், அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு அளிக்கப்படும். பனைஓலை பொருட்கள் தயாரிக்க 100 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
  • பனை சாகுபடியை ஊக்குவிக்க இந்த ஆண்டு 25 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்; சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும்.
  • மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றிற்கான மரபணு வங்கி, நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் துவக்கப்படும்.
  • திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிகோ) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
  • பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் வகையில் “தமிழ் மண் வளம்” என்ற இணையதளம் உருவாக்கப்படும்.
  • பெரம்பலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தருமபுரி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் 2ம் கட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.125.44 கோடி ஒதுக்கீடு.
  • ஆறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு.
  • பொது, தனியார் பங்கேற்பு முறையில் தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ” மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைத்து, அண்டை மாநில வியாபாரிகள் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வசதிகள் செய்யப்படும்.
  • கைபேசி மூலம் இயக்கிடும் வகையில் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள், 50% மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.5,000 மானியத்தில் வழங்கப்படும்.
  • பம்பு செட்டுகள் இயக்க தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் பாம்பு கடித்து இறப்பதை தடுக்க, தானியங்கியாகவோ அல்லது செல்போன் மூலமாக பம்பு செட்டுகளை இயக்கும் திட்டம் ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
  • மயிலாடுதுறையில் ரூ.75 லட்சம் செலவில் புதிய மண் பரிசோதனை கூடம் அமைக்கப்படும்.
  • பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட ரூ.2,546 கோடி நிதி ஒதுக்கீடு.
  • முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தில் 3,000 மானாவாரி நிலத் தொகுப்புகளில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறுவதற்கு ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதை கண்காணிக்க நடவடிக்கை.
  • சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்.
  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டத்தின் மூலம் 3 லட்சம் வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு ரூ.42.07 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு.
  • அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள்.
  • 145 சூரிய சக்தி உலர்த்திகளுக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு.
  • முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ரூ.65.34 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
  • காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.
  • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பனை மரக்கன்றுகள் வழங்கப்படும்.
  • தக்காளி விலையை சீராக்க உற்பத்தி குறைவாக உள்ள மாதங்களில், உற்பத்தியை அதிகரிக்க மானியம் வழங்கப்படும். ரூ.8000 மானியத்தில் இடுபொருட்கள் தக்காளி விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
  • திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும், இதற்காக ரூ.381 கோடி ஒதுக்கீடு.
  • காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடியும், பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.
  • உழவர் சந்தைகளில் மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை. இனி மாலையிலும் உழவர் சந்தை என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறு தானியங்கள், பயறு வகைகளை விற்பனை செய்ய அனுமதி.
  • உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
  • தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.27.51 கோடி ஒதுக்கீடு.
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம். கிராம நிலங்களுக்கு புவியிடக்குறியீடு, புதிய பயிர்த் திட்டத்திற்கான பரிந்துரை, பூச்சி மற்றும் நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.
  • பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடி ஒதுக்கீடு.
  • தேனீ வளர்ப்பு தொகுப்புக்கு ரூ.10.25 கோடி ஒதுக்கீடு. தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ரூ.8.51 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
  • மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவி ரூ.20 கோடி ஒதுக்கீடு.
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவிற்கு ரூ.5,157 கோடி ஒதுக்கீடு.
  • சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் & தானியங்கி எடைகள் அமைக்க ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு.
  • கரும்பு சாகுபடி ஊக்குவிப்புக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
  • உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு,குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.195 உயர்த்தி வழங்கப்படும். கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,950 ஆக நிர்ணயம்.
  • விவசாய கூலித் தொழிலாளர்களை வட்ட, மாவட்ட அளவில் ஒருங்கிணைக்க புதிய திட்டம் தொடங்கப்படும்.
  • நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விவசாயிகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.நடப்பாண்டில் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும். வேளாண்துறையில் உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை முழுமையாக மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை.
  • சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்.
  • சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.28.50 கோடி ஒதுக்கீடு. தூத்துக்குடி, விருதுநகர் தென்காசி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு பயிரிடலை அதிகரிக்க ரூ.28.50 கோடி ஒதுக்கீடு.
  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.
  • செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க மர வகைகளின் கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
  • முதலமைச்சர் தலைமையில் சிறுதாணிய திருவிழா தொடர்ந்து நடத்தப்படும். சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.
  • இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு. 30,000 மெட்ரிக் டன் அளவில் நெல் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
  • 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் 5 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.
  • நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும்.
  • 150 வேளாண் தொகுப்புகளை 7,500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிட ரூ.5 கோடி ஒன்றிய அரசு – மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும்.
  • இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசு அளிக்கும். வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
  • வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.
  • வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தார் அமைச்சர்.
  • நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
  • விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.
  • மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.71 கோடி ஒதுக்கீடு.
  • பயிர்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் மாநில அரசின் பங்காக ரூ.2,339 கோடி ஒதுக்கீடு.
  • 3204 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.300 கோடி மாநில அரசின் நிதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • உழவர்களை கைப்பிடித்து வளர்ச்சிக்கு அழைத்துச்செல்ல ஊரகவளர்ச்சி துறையுடன் இணைந்து வேளாண்துறை பாடுபடும்
  • சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.விவசாயிகளின் வருமானதை அதிகரிக்க மாநில வேளாண் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இயற்கை வேளாண்மை ஊக்குவிக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. புவி வெப்பமடைவதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிர்களை சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்படும்.
  • பருவமழையால் பாதிக்கப்பட்ட 3.35 லட்சம் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் குறைகளை தீர்க்க குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  • 2021-22ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உயர்மட்ட குழு மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.
  • குறுவை சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி நடக்கிறது; 20,000 விவசாயிகளுக்கு ஓராண்டில் ரூ.5 கோடி மதிப்பில் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80க்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6 அறிவிப்புகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் பட்ஜெட்டில் தகவல்.
  • விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் வேளாண் பட்ஜெட். உழவர் தொழிலே உலகில் உயர்ந்தது என உணர்த்தும் வகையில் பட்ஜெட்டை முன் வைப்பதில் பெருமைகொள்கிறேன் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
  • வேளாண்மை உச்சநிலைக்கு செல்ல இந்த வேளாண் பட்ஜெட் உதவும்.
  • வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார்.
  • 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்