மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்..!

டாஸ்மாக் மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இன்று முதல் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மதுபான கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை கடை மூடப்படும் என்றும் அரசு அறிவித்தது.

இந்நிலையில், மதுபான கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க டோக்கன் முறை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என நேற்று தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில்  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல. மக்களை பாதிக்காத வகையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மிகவும் முக்கியமானதான டாஸ்மாக் மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்தும், 200 வகையான நோய் பாதிப்புகளில் இருந்தும் மக்களைக் காப்பாற்ற முடியும்!

இவை அனைத்தையும் விட முக்கியமானது மக்களே… விழிப்புணர்வுடன் இருங்கள். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். முகக்கவசம் அணியுங்கள். தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

author avatar
murugan