கோலியின் சதம் யாரோ ஒருவருக்கு மகிழ்ச்சி அளிக்காது.. கம்பீரை சீண்டும் பத்திரிகையாளர் ரஜத் சர்மா!

கோலி சதத்தை அடுத்து, லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் மீது பத்திரிகையாளர் ரஜத் சர்மா மறைமுக விமர்சனம்.

நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 65-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 62 பந்துகளில் சதம் விளாசினார். கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு, 4 ஆண்டுகள் கழித்து, ஐபிஎல்லில் விராட் கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல்லில் தனது 6வது சதத்துடன், போட்டி வரலாற்றில் அதிக சதங்களை அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையையும் விராட் கோலி சமன் செய்துள்ளார்.

நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருந்தாலும், கோலியின் இந்த ஆட்டத்தை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பிவிட்டார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட்டில் ஒரு கிங்குனா அது விராட் கோலி தான் எனவும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆர்சிபியின் விராட் கோலி தனது 6வது ஐபிஎல் சதத்தை அடித்த பிறகு, லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மீது பத்திரிகையாளர் ரஜத் சர்மா விமர்சனம் செய்துள்ளார். அதாவது, விராட் கோலியின் அட்டகாசமான 100… அதனை பார்க்கவே சந்தோசமாக இருந்தது. நிச்சயமாக, எங்காவது யாரோ ஒருவர் மகிழ்ச்சியாக இருக்காமல் இருக்கலாம் என்று பிரபல பத்திரிகையாளர் ரஜத் சர்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே நடந்த மோதல் போக்கு அனைவரையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி இருந்தது.  கம்பீரின் செயல்கள் விளையாட்டுத் திறமைக்கு எதிரானது, எம்.பி. என்ற அந்தஸ்தை அவர் மதிக்கவில்லை, அந்த ஜென்டில்மேனின் ஆட்டத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் ரஜத் சர்மா கூறி இருந்தார். இதற்கு கம்பீரும் பதிலடி கொடுத்திருந்தார்.

எனவே, தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் முன்னாள் டெல்லி மற்றும் மாவட்ட சங்கத்தின் (DDCA) தலைவர் ரஜத் சர்மா, இந்தியா டிவியில் தனது செய்தி நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கம்பீருக்கு பெரும் ஈகோ இருப்பதாகக் கூறினார். இதனால், இருவருக்கும் அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது விராட் கோலியின் சதம் யாரோ ஒருவருக்கு மகிழ்ச்சி அளிக்காமல் இருக்கலாம் என கவுதம் கம்பீரை சீண்டும் வகையில் கிண்டலாக பத்திரிகையாளர் ரஜத் சர்மா ட்வீட் செய்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்