“மருத்துவப் பல்.கழகத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியவர் கலைஞர்தான்” – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை:தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டியவர் கலைஞர் அவர்கள்தான் என்றும்,மருத்துவ மாணவர்கள் அனைவரும் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவை ஆற்ற வேண்டும் என்றும் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 34 வது பட்டமளிப்பு விழா தற்போது நடைபெற்று வருகிறது.அதன்படி,இந்த விழாவில் மருத்துவ படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது.

இவ்விழாவில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.முதல்வராக பதவியேற்றபின் ஸ்டாலின் அவர்கள் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது இதுவே முதல் முறை.மேலும்,இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து,மருத்துவ மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசுகையில்:”1987 இல் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சென்னை சட்டத்தின்படி நிறுவப்பட்டிருந்தாலும்,அதன்பின்னர்,1990 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் “தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம்” என பெயர் சூட்டியவர் அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள்தான்.எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சுமார் இரண்டு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருவது பெருமைக்குரியது.

இந்தியாவுக்கே முன்மாதிரி பல்கலைக்கழகமாக டாக்டர்.எம்ஜிஆர் பல்கலைக்கழகம் விளங்குகிறது.குறிப்பாக,இப்பல்கலைக்கழகம் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் என்பது பலருக்கு கனவாகவும்,சிலருக்கு பெற்றோர்,உறவினர்கள் கனவாக இருந்திருக்கும்.ஆனால்,நீங்கள் மருத்துவம் படிக்க கல்விச்சாலைக்கு வந்ததும் அது அந்த கல்விச்சாலையின் கனவாக மாறுகிறது.மருத்துவர் பட்டத்தை நீங்கள் பெற்ற பிறகு அது இந்த நாட்டின் கனவாக மாறுகிறது.அந்தவகையில்,தனிமனிதர்களாக இருந்த நீங்கள் இன்று முதல் நாட்டுக்கு சேவையாற்றும் மாபெரும் மனிதர்களாக மாறுகிறீர்கள்.

சாதி,மதம்,ஏழை,பணக்காரர் என்று பார்க்காமல் தனக்கு முன்னால் இருப்பது ஒரு உயிர் என்று எண்ணி சேவையாற்றப் போகிறீர்கள்.இனி நீங்கள் நாட்டுக்கு பிள்ளையாக மாறுகிறீர்கள்.

இனிதான் சமூகத்தை பற்றி படிக்க போகிறீர்கள்.மக்கள் மருத்துவர் என்ற பெயரை நீங்கள் பெறவேண்டும்.உங்களிடம் ஒரு முக்கிய கோரிக்கை வைக்க விரும்பிகிறேன்.அதாவது,நீங்கள் அனைவரும் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவை ஆற்ற வேண்டும் என்பதே அந்த கோரிக்கை”,என்று கூறியுள்ளார்.