தகுதியானவர்களுக்கு நகை கடன் தள்ளுபடியாகும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று  முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன் பெரும் வகையில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும்தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்த நகை கடன் தள்ளுபடிக்கான ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றது தெரிய வந்துள்ளது. இதனால், விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். முறைகேடுகளில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டார். நகை இல்லாமல் கடன் வழங்கப்பட்டுள்ளது, கவரிங் நகைகளுக்கு கடன் தந்துள்ளனர் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், அதிமுக ஆட்சியில் குவாரி நிலம், தரிசு நிலங்களுக்கு பயிர்க்கடன் தந்து மோசடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் பயிர்க்கடன் தருவதற்கு பதில் ரூ.80 ஆயிரம் வரை தந்துள்ளனர். விவசாயம் செய்யாதவர்களுக்கும் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.3 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளனர் என குற்றசாட்டியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்