ஜேடியூ-பாஜக கூட்டணி உடையும் அபாயம் – ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட நிதிஷ்குமார்!

பீகார் ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நேரம் கேட்டிருப்பதாக தகவல்.

பாஜகவுடன் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவரச ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து ஆட்சியில் தொடர நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று ஆலோசனை நடைபெற்றது.

பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கருத்து வேறுபாடு காரணமாக, சமீப காலமாக பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்தார்.

இந்த நிலையில், பீகார் ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க முதல்வர் நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ் ஆட்சியமைக்க திட்டம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியை தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து கட்சியினருடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்திய நிலையில், இது தொடர்பாக ஆளுநரை சந்திக்க நேரம் கோரியுள்ளார். இதனால் பீகாரில் ஆளும் ஜேடியூ-பாஜக கூட்டணி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment