ரயில்வே ஊழியரின் அந்த நல்ல மனசுக்கு பரிசாக கிடைத்த ஜாவா பைக்…!

மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல்கேவுக்கு பரிசாக ஜாவா பைக்கை தருவதாக பிரபல பைக் நிறுவனம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வாங்கனி ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்தில் கண்பார்வை தெரியாத பெண் ஒருவர்,தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்போது,அப்பெண்ணின் குழந்தை, திடீரென்று கால்தவறி தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதே தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.பார்வை தெரியாததனால்,குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் அந்தப் பெண் சத்தமாக குரல் எழுப்பினார்.

அப்போது அங்கிருந்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே,குழந்தை விழுந்ததைப் பார்த்தவுடன் வேகமாக ஓடிவந்து சரியான நேரத்தில் குழந்தையை தண்டவாளத்தில் இருந்து பிளாட்பாரத்துக்கு  தூக்கிவிட்டார்.ரயில் தன்மீது மோதவிருந்த சில நொடிகளில் தானும் உடனே  பிளாட்பாரத்தின் மேலே ஏறி தப்பித்துக் கொண்டார்.

மயூர் செல்கே, குழந்தையைக் காப்பாற்றிய சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இதனையடுத்து,மயூர் தைரியமுடன் செயல்பட்ட விதத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,மயூர் செல்கே குழந்தையைக் காப்பாற்றும் வீடியோவை சமூக  ஊடகங்களில் பார்த்த ஜாவா பைக் நிறுவனத்தின் இயக்குநர் தாரிஜா,ஒரு புதிய ஜாவா பைக்கினை மயூர் செல்கேவுக்கு பரிசாக தருவதாக அறிவித்துள்ளார்.