பிரசாந்த் பூசணுக்கு துணை நிற்பது ஒவ்வொருவரின் கடமை – சீமான்

பிரசாந்த் பூசணுக்கு துணை நிற்பது ஒவ்வொருவரின் கடமை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், நீதிபதி ஹெல்மெட் அணியாதது குறித்தும், முக கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் கூறி அவருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது குறித்து வருகின்ற 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவித்தது.

இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பல நூற்றாண்டுகளாய் மறுக்கப்பட்ட கருத்துரிமை, 1947க்கு பிறகான சுதந்திர இந்திய ஒன்றியத்தில் பெயரளவிலேனும் நிலைநாட்டப்பட்டதாக நம்பிக்கொண்டருந்த வேளையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு தண்டனை விரும்பத்தகாத ஒன்று.

நீதித்துறை மீதான எண்ணற்ற இளையோர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பிராசந்த் பூசண் அவர்களோடு துணை நிற்பது சனநாயகத்தின் மீதும், அதனை அங்கீகரிக்கும் அரசியல் சாசனம் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை.

இதுவரை ஏழைகளின் குரலாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் தோழனாகவும் வலம் வந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்கள் மேலும் உறுதியோடு இயங்க, நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே இன்றைய தேவை என்று தெரிவித்துள்ளார்.