இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : ஈரான் அதிபர் – சவுதி இளவரசர் தொலைபேசியியில் முக்கிய ஆலோசனை.!

இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் காசா பகுதி மீது பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் என இரு நாட்டை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. (உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை).

ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும், பாலஸ்தீனிய பகுதியான காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வெளி தாக்குதல் நடத்தி வருவதால்  காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனிய மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை 3.4 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் போரை விடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தியது. இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்காவும், ஹமாஸ் அமைப்புக்கு மறைமுக உதவியாக ஈரானும் செயல்பட்டு வருகிறது.

மீண்டும் அக்டோபர் 6., ஹமாஸ் தாக்குதல்..! அமெரிக்க ஆதரவு.! இஸ்ரேல் பின்னணி நிகழ்வுகள்…

இந்நிலையில் தான், சவுதி அரேபியாவின் மன்னரும், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஈரான் அதிபரும் தொலைபேசி மூலம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த தொலைபேசி உரையாடலில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ‘ பாலஸ்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களுக்கு முடிவு எட்டப்பட வேண்டும்.’ என கூறப்பட்டதாவும்,

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், “தற்போது அனைத்து சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் தொடர்புகொண்டு போர் தொடர்வதை தடுக்க அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும்,  எந்தவொரு வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை சவுதி அரேபியா ஏற்றுக்கொள்ளாது என்று சவுதி இளவரசர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவூதி இளவரசர் மற்றும் ஈரானிய அதிபர் தொலைபேசி உரையாடல் பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகையில், ‘ சவூதி அரேபிய தலைவர்களுடன் நாங்கள் (அமெரிக்கா) தொடர்பில் இருக்கிறோம். ஹமாஸ் தனது தாக்குதல்களில் இருந்து நிறுத்தி கொள்ளவும்,  பணயக்கைதிகளை விடுவிக்கவும், ஹமாஸுக்கு ஈரான் அளிக்கும் ஆதரவை விலக்கி கொள்ளவும் அமெரிக்கா கேட்டுக்கொள்கிறது.’ என்று அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.