இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.! ரஷ்யாவின் தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா.!

இஸ்ரேல் மீது பாலத்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தற்போது வரை தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் இதுவரை சுமார் 3000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இந்த போர் காரணமாக காசா பகுதியில் வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உலக நாடுகள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றன.

தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர்..! இஸ்ரேல் செல்கிறார் ஜோ பைடன்..!

இந்த போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, ஐநா கூட்டமைப்பில் தீர்மானத்தை கொண்டுவந்தது. ஆனால் அந்த தீர்மானத்தை ஐநா நிராகரித்து விட்டது.  ரஷ்யாவின் தீர்மானத்திற்கு சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொசாம்பிக் மற்றும் காபோன் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ஆதரவாக  வாக்களித்தனர்.

ஐநாவில் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருக்கும் 15 நாடுகளில் 9 நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் எதிராக வாக்களித்தன. மற்ற ஆறு நாடுகள் வாக்களிக்கவில்லை.

அதே வேளையில், போர் நிறுத்தம் தொடர்பாக பிரேசிலின் தீர்மானம் ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ரஷ்யாவின் தீர்மானத்தை நிராகரித்ததிற்கு காரணமாக ஐநா குறிப்பிடுகையில், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் யூதர்கள் மீது நடத்தப்பட்ட மிக பெரிய தாக்குதல் இதுவாகும். ஆனால், அதற்கு காரணமான ஹமாஸ் அமைப்பு பற்றி ரஷ்யா குறிப்பிடவில்லை. அதன் பயங்கரவாதத்தை பற்றி ரஷ்யா பதிவிடவில்லை. அதனால் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

பிரேசில் கொண்டு வந்துள்ள போர் நிறுத்த தீர்மானத்தில், ‘பொதுமக்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகள் மற்றும் விரோதங்கள் மற்றும் அனைத்து பயங்கரவாத செயல்களையும் இந்த தீர்மானம் கடுமையாக கண்டிக்கிறது. அக்டோபர் 7 இல் தொடங்கிய ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனங்களை தெரிவிக்கிறது.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர், ரஷ்ய தூதர் வசிலி நெபென்சியா, தீர்மானத்திற்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தாமதிக்கும் ஒவ்வொரு மணி நேரமும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்றும் , இஸ்ரேல் மற்றும் காஸாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் கண்டிக்கதக்கது என்றும் ரஷ்ய தூதர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் தீர்மானம் குறித்து, அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறுகையில், இஸ்ரேலை அழித்து யூதர்களை கொல்வதை நோக்கமாக கொண்ட ஹமாஸ், இஸ்ரேல் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டது. ஆனால் ரஷ்யா தனது தீர்மானத்தில் ஹமாஸ் அமைப்பை பற்றி குறிப்பிடபடவில்லை. ஹமாஸ் அமைப்பின் நடவடிக்கையை கண்டிக்க தவறியதன் மூலம், அப்பாவி பொதுமக்களை மிருகத்தனமாக நடத்தும் ஒரு பயங்கரவாதக் குழுவிற்கு ரஷ்யா மறைமுக ஆதரவை கொடுக்கிறது என்றும் அமெரிக்க தூதர் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.