இசைஞானி இளையராஜாவை அவமானப்படுத்துவதா.? – ஜே.பி.நட்டா கடும் கண்டனம்

இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்பவர்கள் மீது பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம்.

இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அம்பேத்காருடன், பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பலரும் இளையராஜா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில், பாஜகவினர் ஆதரவு கரமும் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில், இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்பவர்கள் மீது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், தங்கள் கட்சிக்கு ஒவ்வாத ஒரு கருத்தை இளையராஜா சொல்லிவிட்டார் என்பதற்காக அவரை அவமானப்படுத்துவதா..? இதுதான் ஜனநாயகமா ? என கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு வாய்ப்பையும் தவறவிடாமல், இளையராஜாவை அவமானப்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்து இருக்கும். வேறு கருத்து இருக்கிறது என்பதற்காக ஒருவரை அவமதிப்பதா? தமிழ்நாட்டின் ஆளும் கட்சியோடு இணைந்து செயல்படும் சிலர், தாங்கள் விரும்பாத கருத்தை இளையராஜா கூறினார் என்பதற்காக அவரை அவமதித்து வருகின்றனர்.

இதுவா ஜனநாயகம்? இலையராஜா குறித்த விமர்சங்களில் ஜனநாயகம் இல்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வன்முறைகள் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக இசைமேதையை அவமதிப்பது சரியான அணுகுமுறை கிடையாது. எனவே, தமிழகத்தில் ஆளும் அரசுக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை குறிவைத்து கருத்துக்களால் தாக்குவதாக ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்