#WIvsIND: வெஸ்ட் இண்டீசை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த இந்தியா!

ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்கள்  சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது இந்தியா. 

வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, 2-வது ஒரு நாள் போட்டியில், 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி மற்றொரு வெற்றியை பதிவு செய்து, மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இருப்பினும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை நேற்று இந்தியா எதிர்கொண்டது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்கள் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் களமிறங்கியது. அதன்படி, குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். நிதானமாக விளையாடிய தவான் தனது 37வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் சுப்மன் கில்லும் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணி 113 ரன் எடுத்திருந்த போது தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. வால்ஷ் பந்தில் தவான் 58 ரன்களில் அவுட்டானார். இதன்பின், இந்திய அணி 24 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 115 ரன் எடுத்திருந்த நிலையில், மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது.

பின்னர் தலா 40 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டது. பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணிக்கு ஷ்ரேயாஸ் 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். மறுபுறம் சுப்மான் கில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 36 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 225 ரன் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. இதனால், சுப்மன் 98*, சாம்சன் 6* களத்தில் இருந்தனர். போட்டியின்போது தொடர் மழையால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 35 ஓவரில் 257 என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தொடக்க முதலே விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதில், பிராண்டன் கிங், கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அதிகபட்சமாக தலா 42 ரன்களை எடுத்தனர். இந்தியா அணி பந்துவீச்சை பொறுத்தளவில்சாஹல் 4, முகமது சிராஜ் 2, ஷர்துல் தாக்கூர் 2 என விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஒய்ட் வாஷ் செய்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை சுப்மான் கில் வென்றார். ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்கள் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது இந்தியா. வெஸ்ட் இண்டீஸின் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்தது வரலாற்றில் இதுவே முதல் முறை என்பதாகும்.

வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்த இந்தியா, 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே வரும் 29ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரின் இறுதி போட்டி ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment