பதிலுக்கு பதில்., அபார வெற்றி – ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2ம் இடத்தில் இந்தியா.!

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதல் சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. இந்தியா நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 13ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் அடித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்திருந்தார்.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து, 429 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தந்து 2வது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 164 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர்.

மேலும் இந்த வெற்றியால் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இங்கிலாந்து அணி மீண்டும் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனிடையே, சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி வாய்ப்பை இந்திய அணி இந்த வெற்றி மூலம் தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்