தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறையே இருக்காது.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன்..

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் இன்று பிரச்சனை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. கோவிலுக்குள் பிரச்சனையால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கோவில் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பக்தர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

கோவிலுக்குள் ரத்தம் சொட்ட ஐயப்ப பக்தர் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், கோயிலுக்கு வரும் பக்தர்களை அநாகரீகமாக நடத்துவதையும், இந்து கோயில் பாரம்பரியத்தை சீர்குலைப்பதிலும் தொடர்ந்து முழு முச்சுடன் செயல்பட்டு வரும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் அறநிலையத்துறை பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை.

கோடநாடு கொலை வழக்கு! இபிஎஸ் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டாம்.. ஐகோர்ட் உத்தரவு!

இந்துக்களை பிடிக்காத திமுக அரசிடம் வேறு எதை எதிபார்க்க முடியும். தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவரது பதிவில், இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு அரசாங்கம், இந்துக் கோவில்களில் இருக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நீண்ட வரிசையில் பக்தர்களை காத்திருக்க வைத்ததை ஐயப்ப பக்தர்கள் கேள்வி எழுப்பியதன் விளைவாக, கோவில் வளாகத்திற்குள் ரத்தக்களரி ஏற்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையை கோவில் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு பாஜக ஏன் விரும்புகிறது? என்பதற்கு அவர்களின் இத்தகைய ஆணவமும் ஒரு காரணம். கோவில் புனிதத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்