எண்ணெய் கழிவுகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை சுற்றுவட்டார புறநகர் பகுதியில் சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் காணப்படும் நிலையில், எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதி மக்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இது குறித்து,உரிய ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு குழுவை அமைத்தது. அதன் மூலம் இந்த எண்ணெய் கழிவு எங்கிருந்து வந்தது, இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் ஆர்.கண்ணன் தலைமையில் இந்த ஆய்வு குழு உருவாக்கப்பட்ட நிலையில், எண்ணெய் கழிவு தேங்கிய பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் முகத்துவாரம், எண்ணூர் கழிமுகம் உள்ளிட்ட இடங்களில் கழிவு பற்றி ஆய்வு செய்து அதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சமர்ப்பித்தனர்.

பெரும் புயல் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது… தமிழக அரசுக்கு மத்திய ஆய்வு குழு பாராட்டு.!

அந்த அறிக்கையில், சென்னை எண்ணூரில் மத்திய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் (Chennai Petroleum Corporation Limited) நிறுவனத்தில் இருந்தே இந்த எண்ணெய் கழிவு பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக எண்ணூர் கழிமுகம் பகுதியில் கலந்துள்ளத என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்று வந்த நிலையில், எண்ணூரில் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். சிறார்களை எண்ணெய் அகற்றும் பணிகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்து இந்த வழக்கை டிச.14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.