சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் -டி.டி.வி. தினகரன்..!

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள தொகுதி என 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என தினகரன் தெரிவித்தார். சசிகலாவுக்கு கூடிய தொண்டர்கள், மக்கள் கூட்டம், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை மக்கள் மனதில் இருந்து வெளிப்படுத்துகிறது.

உறுப்பினர் அட்டை வழங்கும் அதிகாரமே பொதுச்செயலாளரிடம் தான் உள்ளது. ரஜினிகாந்த் நேற்று என்னிடம் பேசி சசிகலா நலம் பற்றி விசாரித்தார். மேலும், நிறைய பேர் சசிகலா நலம் குறித்து விசாரித்து இருக்கலாம். ரஜினி விசாரித்ததை சொல்வதில் தவறு கிடையாது. அவர் ஒரு நண்பராக விசாரித்தார். ஒரு எம்.எல் ஏ அல்லது அமைச்சர் விசாரித்து, அதை நான் வெளியில் சொன்னால் தேவையில்லாமல் அவர்களுக்கு ஒரு பிரச்சினை வரும்.

புரட்சித்தலைவர் கண்ட அதிமுகவில் ஜெயலலிதா இருந்த வரையும் அதில் உள்ள  சட்ட விதிகளில் பொதுச்செயலாளர் தான் எல்லா அதிகாரம் உடையவர். அவர் தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொதுச்செயலாளர் தான் ஒருவருக்கு பதவி நியமனம் செய்ய முடியும், பதவியில் இருந்து நீக்கமுடியும்.

தேர்தல் ஆணையம் கட்சியின் பெயரையும், சின்னத்தை பற்றித்தான் விசாரித்துள்ளது. ஆனால், எப்போதும் கட்சிக் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என தெரிவித்தார்.

author avatar
murugan