கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐபிஎல்2024:பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் , ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டி  சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தனர்.

287 ரன்கள் எடுத்தது மூலம் ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 102 , ஹென்ரிச் கிளாசென் 67 ,  ஐடன் மார்க்ராம் 32* , அப்துல் சமது 37* ரன்கள் குவித்தனர். 288 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்கியது. அதன்படி தொடக்க வீரர்களாக விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர்.

இலக்கு அதிக ரன்கள் என்பதால் இருவருமே ஆட்டம் தொடங்கியது முதல் அதிரடியான ஆட்டத்தை விளையாடி வந்தனர். அதில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 7-வது ஓவரில் விராட் கோலி 42 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். விராட் கோலி 20 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார். அதைத்தொடர்ந்து வில் ஜாக்ஸ் களமிறங்க அவர் அடுத்த ஓவரிலே 7 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரஜத் படிதார் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸர் விளாசினார்.

அடுத்த பந்தில் மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்ற போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த நிதிஷ் ரெட்டி அவரது கேட்சைப் பிடித்தார். 10 -வது ஓவரை கேப்டன் பாட் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரில் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் 62 ரன்கள் இருந்தபோது விக்கெட் கீப்பர் கிளாசெனிடம் கேட்சைக் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதே ஓவரில் கடைசி பந்தில்  புதிதாக களம் இறங்கிய சௌரவ் சவுகான் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் பெங்களூரு அணி 10 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். பிறகு மத்தியில் இறங்கிய தினேஷ் கார்த்திக் , லோம்ரோர் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். அதன்படி 13 மற்றும் 14 -வது ஓவரில் 46 ரன்கள் குவித்தனர்.

ஏற்கனவே 2 ஒரே ஓவரில் 2 விக்கெட்டை பறித்த பாட் கம்மின்ஸ்  15 -வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலே லோம்ரோர் 19 ரன்கள் போல்ட் ஆகி நடையை கட்டினார். மறுமுனையில் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 23 பந்தில் அரைசதம் அடித்து மொத்தமாக 83 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர் அடங்கும்.

இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும்,  மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டையும் பறித்தனர்.

ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி அதில் 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு அணி இதுவரை 7 போட்டியில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

author avatar
murugan