அட்டகாசமான அரிசி வடகம் எப்படி செய்வது…? வாருங்கள் அறியலாம்!

காரக்குழம்பு அல்லது சாம்பார் வைக்கும் பொழுது பொரியல் ஏதாவது செய்ய வேண்டும். இதற்கு சற்று காரமாக செலவில்லாமல் வீட்டிலேயே அப்பளம், வடகம், வற்றல் போன்றவை செய்து வைத்தால் நன்றாக இருக்கும். இன்று எப்படி வீட்டிலேயே அரிசி வடகம் செய்வது என அறியலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • புழுங்கல் அரிசி
  • பச்சை மிளகாய்
  • சீரகம்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு

செய்முறை

முதலில் அரிசியை ஊறவைத்து நன்றாக கழுவி கிரைண்டரில் சேர்த்து மை போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு கிரைண்டரை கழுவி அந்த தண்ணீரில் இரண்டு கிளாஸ் எடுத்து அரைத்து அரிசி மாவில் ஊற்றி கிளறி விடவேண்டும். பின் அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் 5 பச்சைமிளகாய் சேர்த்து ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

அதன் பின்பு அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கிளறுவதை நிறுத்திவிட்டால் மாவு பாத்திரத்தில் பிடித்து விடும். எனவே 10 நிமிடங்கள் நன்றாக கிளர வேண்டும். அப்பொழுது தான் மாவு நன்றாக வேகும். அதன் பின் தண்ணீரில் கையை நனைத்துவிட்டு தொட்டுப் பார்க்கும் பொழுது மாவு கையில் ஒட்டாமலிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மாவு வெந்து விட்டது.

அதன் பின் மாவு நன்றாக ஆறியதும் ஒரு காட்டன் துணியை வெயில் நன்றாக அடிக்கக்கூடிய பகுதியில் விரித்து வைத்து முறுக்கு அச்சு வைத்து பிழிந்து விடவேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் காய்ந்துவிடும்.  இல்லையென்றால், வட்ட வட்டமாக தட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு நன்கு காய்ந்ததும் காற்று புகாத ஒரு டப்பாவில் அடைத்து வைத்தால் ஒரு வருடம் வரை இதை வைத்துப் பயன்படுத்தலாம். இது போல நீங்கள் வீட்டில் செய்து பாருங்கள் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

author avatar
Rebekal