கனமழை…. 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் வரலாறு காணாத வகையில் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து, சாலைகளில் மழைநீர் பயக்கிறது. கனமழை, வெள்ளத்தால் மக்களை இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு படையினர் தீவிரமாக வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரம் அதி கன மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்!

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூரில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமை செயலாளர் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து அமைச்சர்களுடனும், அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் – நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்