Guwahati IIT:”கவுஹாத்தி ஐ.ஐ.டி. பாலியல் பலாத்கார வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது” – எம்பி கனிமொழி வேதனை…!

கவுஹாத்தி ஐ.ஐ.டி. பாலியல் பலாத்கார வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று இரவு, ஐஐடி கவுகாத்தியில் மாணவி ஒருவர், அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன் பின்னர், சம்பவ இடத்தில் இருந்து அடுத்த நாள் மீட்கப்பட்டு அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர் ஏப்ரல் 3-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்து இருந்த நிலையில், “மாநிலத்தின் எதிர்காலச் சொத்து” என்று கூறி கவுகாத்தி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், இது தொடர்பாக, ஐஐடி-கவுகாத்தியின் நீதிபதி அஜித் போர்த்தகூர் கூறியதாவது, “அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதால், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என இருவரும் மாநிலத்தின் எதிர்கால சொத்துக்கள், ஐஐடி, கவுகாத்தியில் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்கும் திறமையான மாணவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தொடர்ந்து காவலில் வைத்திருப்பது அவசியமற்றதாகிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,19 முதல் 21 வயதுக்குட்பட்ட இருவரும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். குற்றப்பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சாட்சிகளின் பட்டியலை ஆராய்ந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் தங்கள் சான்றுகளை சேதப்படுத்தவோ அல்லது  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களை பாதிக்கும் வாய்ப்பு இல்லை” என்று கூறி ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில்,கவுஹாத்தி ஐ.ஐ.டி. பாலியல் பலாத்கார வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“கவுஹாத்தி ஐ.ஐ.டி. பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை, ‘திறமையான மாணவர் என்றும் ‘மாநிலத்தின் எதிர்காலச் சொத்து’ என்றும் கூறி, அங்குள்ள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது”,என்று பதிவிட்டுள்ளார்.