#IPL2022: 4 விக்கெட்களை வீழ்த்திய லாக்கி பெர்குசன்.. குஜராத் அணி அபார வெற்றி!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது, குஜராத் டைட்டன்ஸ் அணி.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 10-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தனர்.

172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டிம் செய்பெர்ட் களமிறங்கினார்கள். 3 ரன்கள் அடித்து டிம் செய்பெர்ட் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய மந்தீப் சிங், ப்ரித்வி ஷாவுடன் இணைந்து சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய மந்தீப் சிங், 18 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கொரை சற்று உயர்த்த, அவருக்கு இணையாக லலித் யாதவ் சிறப்பாக ஆடினார். 25 ரன்களில் லலித் யாதவ் தனது விக்கெட்டை இழக்க, 43 ரன்கள் எடுத்து ரிஷப் பண்ட்தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரோமன் போவெல் 20 ரன்கள் அடித்து வெளியேற, பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் அடித்தனர். இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. பந்துவீச்சில் லாக்கி பெர்குசன் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.