#IPL2022: வெளுத்து வாங்கிய ருதுராஜ்.. குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 29-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – ராபின் உத்தப்பா களமிறங்கினார்கள்.

கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய உத்தப்பா, இந்த போட்டியில் 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மொயின் அலி 1 ரன் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு, ருதுராஜுடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்தனர். இருவரின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் உயர, 46 ரன்கள் எடுத்து அம்பதி ராயுடு தனது விக்கெட்டை இழந்தார்.

அவரைதொடர்ந்து சிவம் துபே களமிறங்க, அதிரடியாக ஆடிவந்த ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளுக்கு 73 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து கேப்டன் ஜடேஜா களமிறங்க, 12 பந்துகளுக்கு 22 ரன்கள் அடித்தார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது.