குப்பைக் கழிவுகளை தரம்பிரித்து வழங்குக.. இல்லையெனில் அபராதம் – வீடு வீடாக சென்று நோட்டிஸ்!

பொதுமக்கள் குப்பைக் கழிவுகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று நோட்டிஸ்.

அந்த நோட்டீஸில், சென்னை மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை (Wet Waste/Biodegradable Waste and Dry Waste Non-Biodegradable Waste) என வகைப் பிரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. தீங்கு விளைவிக்ககூடிய வீட்டின் அபாயகரமான குப்பையை (Domestic Hazardous Waste) வாரம் ஒருமுறை தனியாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு பொது மக்களால் பிரித்து கொடுக்கப்படும் மக்கும் குப்பையை பதப்படுத்தி, அதிலிருந்து இயற்கை உரம் (Organic Manure) மற்றும் இயற்கை எரிவாயு (Bio-CNG) தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும், பதப்படுத்தவும் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் சென்னையின் மிகப் பெரிய குப்பை கிடங்குகளான கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லும் குப்பையின் அளவு குறைக்கப்பட்டு, சுற்றுப்புறத் தூய்மை மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கும் குப்பைகள்: உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், மாமிச கழிவுகள், தோட்ட கழிவுகள் மற்றும் காய்ந்த மலர்கள், இலைகள் ஆகும்.

மக்காத குப்பைகள்:பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், அட்டைகள், காகிதம், செய்தித்தாள்கள், தெர்மோகோல், தோல் பொருட்கள், இரும்பு கழிவுகள், மரக்கழிவுகள், டயர், டியூப் மற்றும் ரப்பர் பொருட்கள் ஆகும்.

தீங்கு விளைவிக்ககூடிய வீட்டு உபயோக குப்பைகள் (Domestic Hazardous Waste): தேவையற்ற வர்ண டப்பாக்கள், காலி பூச்சிக் கொல்லி மருந்து டப்பாக்கள், சி.எப்.எல்.விளக்குகள், குழல் விளக்குகள் மற்றும் இதர விளக்குகள், காலாவதியான மருந்துகள், உடைந்த பாதரச ஜீரமானிகள், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் ஊசி மருந்து குழல்கள் மற்றும் சுகாதார கெடுதல் கழிவுகளான பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள்,

மேலும், அணையாடைகள் (டயப்பர்) சுகாதார அணையாடைகள் (சானிட்டரி பேட்) ஆகிய கழிவுகளை பாதுகாப்பாக தனியே ஒரு உறையில் போட்டு கட்டி அவைகளை மக்காத குப்பையோடு சேகரித்து விடுகள் தோறும் வரும் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாரிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, மேற்கூறியவாறு மக்கும், மக்காத குப்பையாக விதிகளின் படி வகைப் பிரித்து வழங்காத பொது மக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள், 2019ன் படி அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதன்படி, தனி நபர் இல்லங்களுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்பு / குழு குடியிருப்புகளுக்கு ரூ.1000, பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 என அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் நோட்டிஸ் கொடுத்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment