“அரசுப்பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு கருணைத் தொகை, முன்பணம் வழங்க வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கருணைத் தொகை, முன்பணம் வழங்க அதிக செலவாகாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு அரசு கருணைத்தொகை,முன்பணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. மே மாதத்துக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பல ஆண்டுகளாக பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. போனஸ், கருணைத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை.

தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு கருணைத் தொகை, முன்பணம் வழங்க அதிக செலவாகாது. ஆனால், அது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கும். எனவே அவர்களுக்கு அரசு கருணைத்தொகை, முன்பணம் வழங்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.