கூகுள் -ஜியோ இடையே ஒப்பந்தம் ! ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அம்பானி அறிவிப்பு

ஜியோவில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள் நிறுவனம்.

கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியுடன், கூகுள் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை காணொலி மூலமாக கலந்துரையாடினார்.  இதன் பின் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.

கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஃபேஸ்புக்,இன்டெல் ,குவால்காம் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றது.  இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில்  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி பேசுகையில் , ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து என்ட்ரி லெவல் 4ஜி/5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உலக பணக்காரர்கள் பட்டியலில் கூகுள் துணை நிறுவனர் லாரி பேஜை பின்னுக்கு தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி, 6ஆம் இடத்திற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.