“மரக்கன்றுகளை வளர்ப்போருக்கு தங்க நாணயம்?” – அமைச்சர் சேகர்பாபு அசத்தல் அறிவிப்பு!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அண்மையில் 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி,முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.அந்நாளில் முதல்வர் பல்வேறு உதவிகளையும்,கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.

இந்நிலையில்,கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் மாவட்ட கிழக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி சார்பில் 9999 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து,கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வருபவர்களுக்கு அடுத்த ஆண்டு கலைஞர் பிறந்த நாளில் தங்க நாணயம் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் மேடையில் பேசுகையில்:

“தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணிக்கு முதல்வர் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.இதனால்,கலைஞர் பிறந்த நாளில் மரக்கன்றுகளை நட்டு,அதனை நன்றாக பரமாரித்து வருபவர்களுக்கு குழுவை வைத்து தேர்வு செய்து அடுத்த ஆண்டு இதே நாளில் பரிசு வழங்கப்படும்.மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இவை வழங்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment