#BREAKING: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!

தேவைப்பட்டால் முழு ஊரடங்கு  நீடிக்கலாம் என சட்டமன்ற குழு பரிந்துரைத்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேமம் கிராமத்தில் தடுப்பூசி போட கூடிய பணியை தொடங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று செங்கல்பட்டில் HLL நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டேன். இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் கிடங்கை ஆய்வு செய்தேன். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேமம் கிராமத்தில்  ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி போட கூடிய பணியை தொடங்கி வைத்தேன்.

அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களையும், அதேபோல அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் நான் தொடர்ந்து அறிவுறுத்தி இருக்கிறேன்.அதன் அடிப்படையில்தான் நானே இன்று நேரடியாக இந்த பகுதிக்கு வந்து குறிப்பாக  ஊரகப் பகுதிகளில் தொடங்கி வைத்திருக்கிறேன். கொரோனா தொற்று நோய் பரவுவதைத்தடுப்பது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை  பாதுக்காப்பது இந்த இரண்டு இலக்கோடு தமிழக அரசு முழு மூச்சோடு செயல்பட்டு வருகிறது.

தொற்றை  தடுப்பதற்கு நோய் பரவக்கூடிய சங்கிலியை உடைக்க வேண்டும். அதற்காக தான் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முழு ஊரடங்கு எந்த தளர்வும் இல்லாமல் அமல்படுத்திய காரணத்தினால் கடந்த இரண்டு நாட்களாக அதனுடைய பயன் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முழுப்பயனையும் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் அனைவரும் முழு ஊரடங்கு கடைபிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காக்க ஏராளமான மருத்துவ உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொற்று குறையும். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2.84 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் தடுப்பூசி வீணாக்குவது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட முன்வர வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி வாங்கப்படும். தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும். தேவைப்பட்டால் முழு ஊரடங்கு  நீடிக்கலாம் என சட்டமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. சட்டமன்றக் குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

author avatar
murugan