மணீஷ் சிசோடியா முதல் பொன்முடி வரை… 2023-ல் நடந்த முக்கிய நிகழ்வுகள் ..!

ஜனவரி:

இந்திய மலியுத்த சம்மேளன தலைவராக பொறுப்பில் இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பல இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய மல்யுத்த வீரர்கள் தலைமையில், பல மல்யுத்த வீரர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பிப்ரவரி :

டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதல்வராக பொறுப்பில் இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ பலமணிநேர விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு தீர்ப்பளித்தது.

மார்ச்:

சூரத் நீதிமன்றத்தால் அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது . லோக்சபா செயலகம் வெளியிட்ட நோட்டீஸில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நாளான மார்ச் 23 முதல் அவர் சபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஏப்ரல்:

இந்தியா அதிகாரப்பூர்வமாக சீனாவை விட உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறியது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியா 142.86 கோடி மக்கள்தொகையையும் , சீனா 142.57 கோடி மக்கள்தொகையையும் கொண்டுள்ளது.

மே :

மணிப்பூரில், இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையான மைதேயி  மக்களுக்கும் மற்றும் சுற்றியுள்ள மலைப்பகுதிகளைச் சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்திற்கும் இடையே இனக்கலவரம் நடந்தது. இந்த கலவரத்தால் 175 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். தொடக்க விழா நிகழ்வில் பிரதமர் மோடி 1947- ல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார். ரூ.971 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில், தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் லோக்சபாவில் 888 மற்றும் ராஜ்யசபாவில் 300 பேர் தங்கலாம் லோக்சபாவில் 543, ராஜ்யசபாவில் 250 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஜூன்:

சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் , SMVT பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை பஹானாகா பஜார் நிலையம் அருகே ஜூன் 2 -ஆம் தேதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 280 பேர் பலி, 850க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

ஜூலை:

குக்கி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மர்ம கும்பல் நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட்:

ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த நிலையில் அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த உத்தரவை லோக்சபா திரும்பப் பெற்றது. பின்னர் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்பி-யாக மீண்டும் நாடாளுமன்றம் திரும்பினார்.

செப்டம்பர்:

செப்டம்பர் 28-ஆம் தேதி இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் என அழைக்கப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதன் மரணம் அடைந்தார்.

அக்டோபர்:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி பனிப்பாறை ஏரியான தெற்கு லோனாக் ஏரிப்பகுதியில் கொட்டித்தீர்த்த அதீத கனமழையால் மாங்கன், காங்டாக், பாக்யோங் மற்றும் நாம்ச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் உயிரிழந்தனர்.

அக்டோபர் 19-ஆம் தேதி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மரணம் அடைந்தார்.

அக்டோபர் 17-ஆம் தேதி ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுப்பு தெரிவித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. இதற்கான சட்டத்தை நாடாளுமன்றம்தான் இயற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கமலச்சேரியில் நடைபெற்ற கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அடுத்தடுத்து 3 முறை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.இதில் 2-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில் ஏறக்குறைய 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

நவம்பர்: 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் , தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

நவம்பர் 12 அதிகாலை உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சுரங்கப்பாதை இடிந்ததில் அங்கே பணிபுரிந்த 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். 400 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மீட்பு நடவடிக்கையின் பலனாக சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்புப் படையினர் நவம்பர் 28-ஆம் தேதி மீட்டனர்.

இந்தியாவில் நடைபெற்ற 13-வது  உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற்றது. இதில், 10 அணிகள் இடம் பெற்று விளையாடின.

நவம்பர் 15-ஆம் தேதி கம்யூனிஸ்டு தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா 102 வயதில் மரணம் அடைந்தார்.

டிசம்பர்:

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம் , ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடித்தது. இதனால், 17 மாநிலங்களில்பாஜக ஆட்சியில் உள்ளது. தெலுங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

மிக்ஜாம் புயல் (Cyclone Michaung) என்பது வங்கக் கடலில் உருவானது. வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், டிசம்பர் 3 அன்று புயலாக வலுப்பெற்றது. பின்னர் டிசம்பர் 5 அன்று நெல்லூருக்கும், மசிலிப்பட்டணத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. இதனால் மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான டிசம்பர் 13-ம் தேதி பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 இளைஞர்கள்  நுழைந்து கோஷங்களை எழுப்பி வண்ண புகை குண்டுகளை வீசினர். இதனால் அவையில் இருந்த உறுப்பினர்களை பீதியை ஏற்படுத்தியது.

தென் மாவட்டங்களில் டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு வெள்ளம் ஏற்பட்டது.

டிசம்பர் 14-ஆம் தேதி விஜயகாந்த் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக பொது செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டார்.

டிசம்பர்11-ஆம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

டிசம்பர் 21 ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக டிசம்பர் 28-ஆம் தேதி காலை காலமானார்.

author avatar
murugan