தவறாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..? காசாவில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள்..!

Gaza Attack : காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் வெளிநாட்டு தன்னார்வலர்கள் உயிரிழந்தனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல் என்பது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஹாமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என கூறி காசா நகர் மீது தற்போது வரையில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம். இதுவரை காசா நகரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

காசா நகரில் மக்கள் அதிகமாக உயிரிழந்து, அவர்களின் அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்கப்பெறாமல் கஷ்டப்படுவதால் பல்வேறு நாட்டினர் காசா நகரத்து மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்து வருகின்றனர். அப்படி உதவி செய்யும் ஒரு அமைப்புகளில் ஒன்று தான்  World Central Kitchen என்ற தொண்டு நிறுவனம் ஆகும்.

இந்த தொண்டு நிறுவனம் காசா நகரில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்த போது இஸ்ரேல் ராணுவம் அப்பகுதியில் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதில்  ஆஸ்திரேலியா, பிரிட்டன், போலந்து உள்ளிட்ட நாட்டை சேர்ந்த 7 தன்னார்வ தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

லால்சவ்மி ஃபிராங்கோம் எனும் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த நபர், டாமியன் சோபோல் எனும் போலந்து நாட்டை சேர்ந்தவர் , ஜான் சாப்மேன், ஜேம்ஸ் கிர்பி, ஜேம்ஸ் ஹென்டர்சன் ஆகிய 3 பேரும் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்கள் என  உயிரிழந்தோர் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், தங்கள் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் தவறுதலாக உயிரிழந்ததாகவும், இது குறித்து முழுமையான விசாரணை நடத்த இஸ்ரேல் ராணுவம் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.