இனி சாதி, மதம் எனக்கு கிடையாது- நிம்மதி பெருமூச்சு விடும் சாமானிய பெண்ணின் தேசிய அளவிலான சாதனை!

“யாருங்க இந்த காலத்துல சாதி, மதம்லா பாக்குறாங்க” இந்த வார்த்தைக்கு பின்னால் ஆயிரம் ஆயிரம் அரசியல் சூழ்ந்திருக்கிறது என்பதே நிதர்சனம். சாதி- இந்த ஒற்றை வார்த்தை பல குடும்பங்களை வேரோடு சாய்த்துள்ளது. வயிற்றில் சற்று முன் கருவுற்ற சிசுவையும் இந்த சாதிக்குள் சேர்க்கும் பழக்கம் இந்த மனித இனத்திற்கே உரிய பண்பாக மாறியுள்ளது. ஊர்களின் அளவில் சாதியாகவும், தேசிய அளவில் மதமாகவும் இரு பெரிய அணுகுண்டாகவே இவை நீண்ட நாட்களாக வேரூன்றி உள்ளது.

ஆனால், இதற்கும் எனக்கும் ஒரு துளி கூட சம்பந்தமே இனி இல்லைங்க; இந்த சாதி பேயை நான் என்னுள் ஒருபோதும் போர்த்தி கொள்ள மாட்டேன் என தற்போது ஒரு பெண் போராடியுள்ளார். இதை படிக்கும் பலருக்கும் இது ஒரு சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் “தான் சாதியற்றவர், மதமற்றவர்” என்கிற சான்றை அவ்வளவு எளிதில் நம்மால் பெற இயலாது. இருந்தும் இதை தனது போராட்ட குணத்தால் ஒரு பெண் சாதித்து காட்டியுள்ளார். இந்திய அளவிலான இந்த சாதனையை செய்த தமிழ் நாட்டை சேர்ந்த இந்த சாமானிய பெண் யார் என்பதையும், எவ்வாறு இதை அடைந்தார் என்பதையும் இந்த தொகுப்பில் அறியலாம்.

யார் இவர்?
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் தான் இப்பெண்மணி. இவரது பெயர் சினேகா. தற்போது இவர் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். சிறுவயது முதலே சாதி, மதம் போன்றவற்றை இவரின் வீட்டில் உள்ளோர் தவிர்த்து வந்தனர். இதனால் சிறு வயதிலே சாதி, மதம் பற்றிய புரிதலை இவரது பெற்றோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

பள்ளியில்…
பள்ளியில் சேர்க்கும் போது கூட இவரின் பெற்றோர்கள் “இவருக்கு எந்த சாதியும் இல்லை, எந்த மதமும் இல்லை” என்று சொல்லியே சேர்த்துள்ளனர். இதை ஆரம்பத்தில் பள்ளி நிர்வாகம் ஏற்கவில்லை. அதன்பின் பல போராட்டத்திற்கு பிறகு பள்ளி நிர்வாகம் ஏற்று கொண்டது. இதே நிலை தான் கல்லூரியிலும் இவர் சந்தித்தார்.

கல்லூரி படிப்பு…
பள்ளியிலே சாதி, மதமற்றவர் என்பதை முற்றிலுமாக மறுத்தவர் இவர். இதே போன்று கல்லூரிலும் சாதி மதத்தை முழுவதுமாக எதிர்த்து படித்து வந்தார். பல முறை சாதி, மதமற்றவர் என்கிற சான்றிதழை சட்டப்படி பெற வேண்டும் என்று எண்ணி பல்வேறு போராட்டங்களை செய்துள்ளார்.

 

முயற்சி திருவிணையாக்கும்.!
“வெற்றி பெறும் வரை முயற்சி செய்” என்கிற தாரக மந்திரத்தை நினைவில் வைத்து ஒற்றை குறிக்கோளோடு இவர் செயல்பட்டார். இதன் விளைவு, வெற்றி இவரை முத்தமிட்டது. 9 வருடகால போராட்டத்திற்கு பின் “சாதி, மதமற்றவர்” என்கிற சான்றிதழை சட்ட பூர்வமாக பெற்றுள்ளார்.

சாதனை!
இதுவரை இப்படி ஒரு சாதனையை இந்தியாவில் யாருமே செய்ததில்லை. “சாதி, மதமற்றவர்” என்கிற சான்றிதழை பெற்ற முதல் பெண்மணி இவர்தான். இத்தகைய பெருமைக்குரிய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது சினேகா அவர்கள் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

அடுத்த தலைமுறை
சினேகா அவர்கள் எப்படி அவரின் பெற்றோர்களால் சாதி, மதத்தை பற்றிய புரிதலோடு வளர்ந்தாரோ அதே போன்று தான் இவர்களின் குழந்தைகளையும் வளர்கிறார். இன்று வேண்டுமானால் சாதி நம்மிடையே ஊடுருவி இருக்கலாம். ஆனால், நிச்சயம் ஒரு நாள் இவை வேரோடு களையறுக்கப்படும். இது தான் சினேகா போன்றோரின் விருப்பமாக உள்ளது.

Leave a Comment