முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும்- இபிஎஸ்

விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் எக்கியர் குப்பம் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் பாதிக்கப்பட்டு , விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிலருக்கு கண்பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது என குறிப்பிட்டார்.

இதே போல, செங்கல்பட்டு மாவட்டத்திலும், 4 பேர் போலி மதுபானங்களை அருந்தியதால் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். அடுத்ததாக, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கள்ளச்சாராயம் தமிழக்தில் பெருகியுள்ளது. இதற்கு முழு பொறுப்பு ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

அடுத்து, தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதில்லை. திமுகவினர் அதிகாரத்தில் தலையிடுகின்றனர் என குற்றம் சாட்டி, பின்னர், செங்கல்பட்டு, மரக்காணம் பகுதியில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் என தனது இரங்கலை பதிவு செய்தார். மேலும், நாளை செங்கல்பட்டு மற்றும், மரக்காணம் பகுதிக்கு செல்ல உள்ளேன் எனவும் இபிஎஸ் தெரிவித்தார்.

இறுதியாக, மதுபான கடைகள் எல்லா நேரமும் தமிழகத்தில் திறந்து தான் இருக்கிறது. தானியங்கி மூலம் அரசு மதுபானம் விற்கிறது. போலி மதுபானங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட அவர் இதற்கு பொறுப்பேற்று அந்த துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்தும் தனது கண்டனத்தை பதிவு செய்தார் எடப்பாடி பழனிசாமி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.