சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. முதல்வருக்கு இபிஎஸ் கண்டன அறிக்கை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதியில் கொலை, கொலை முயற்சி, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இது குறித்து இன்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த குற்ற சம்பவங்களை பட்டியலிட்டு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என முதல்வருக்கு அறிக்கை வாயிலாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் காவல்துறையை சுதந்திரமாக செயல்படவும் வலியுறுத்தியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், காவல் துறையினரின் கையை கட்டும் நிர்வாகத் திறனற்ற முதல்வராக தமிழக முதல்வர் உள்ளார். அவருக்கு கடும் கண்டனம். கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு; கத்தியால் வெட்டிக்கொலை, செல்போனுக்காக ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளிக் கொலை, சாலையில் செல்லும் பெண்களிடம் நகை வழிப்பறி என்று தொடர்ந்து பல நிகழ்வுகள் தமிழகத்தில் பல இடங்களில் நடந்தேறி வருகிறது.

மக்களைக் காப்பாற்ற காவல் துறையை சரியாக பயன்படுத்தாமல் தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் . அம்மாவின் (ஜெயலலிதா ஆட்சி காலத்தில்) அரசில் எப்படி காவல் துறை சட்டப்படி, சுதந்திரமாக செயல்பட்டதோ, அதுபோல் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டுமென்று  திமுக அரசை வலியுறுத்துகிறேன். என பதிவிட்டுள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.