மொத்தம் 837 பேர் வேட்புமனு தாக்கல்… நெல்லையில் 34 பேர் போட்டி…

Election2024 : தமிழகத்தில் தற்போது வரையில் 837 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் , புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் கன்னியகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான ஆகியவைகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்டமாக நடைபெறும் இந்திய மக்களவை தேர்தலில் இதுதான் முதற்கட்ட தேர்தல் என்பதாலும், நாட்கள்  மிக குறைவாகவே இருந்ததாலும் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபாட்டு வந்தனர்.

கூட்டணி , தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என நாட்கள் குறைவாக இருந்ததால், கடந்த மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனுக்கள் அளிக்க காலஅவகாசம் தொடங்கிய நிலையிலும் கடந்த வாரம் வேட்பாளர்கள் குறைவான அளவிலேயே வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர்.

அதன் பிறகு நேற்று  முன்தினம் (திங்கள்) பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால், அன்றைய தினம் மட்டுமே சுமார் 400க்கும் அதிகமானோர் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று (மார்ச் 27) பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளதால், அதற்குள் தேர்தல் அலுவலகம் வந்தர்களிடம் டோக்கன் கொடுக்கப்பட்டு அதற்கு பின் வந்தவர்களை அனுமதிக்க வேண்டாம் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிற்பகல் 3 மணி வரையில் தமிழகத்தில் 837 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக திருநெல்வேலி மக்களவை தொகுதியில் 34 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அடுத்து வடசென்னையில் 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். டோக்கன் வாங்கியவர்கள் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாளை (மார்ச் 28) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வரும் 30ஆம் தேதி மாலைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறுவோர் பெற்றுக்கொள்ளலாம். அதனை அடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.