ஒரே தொகுதியில் போட்டியிடும் 6 ஓ.பி.எஸ்! சின்னங்கள் ஒதுக்கீடு

OPS: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் 6 ஓ.பி.எஸ் களுக்கும் சின்னங்களை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரோடு களத்தில் இருக்கும் மற்ற ஓ.பி.எஸ்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

அவரைப் போன்றே பன்னீர்செல்வம் என்ற பெயருடன் பலர் வேட்பாளர்களாக உள்ளனர். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே மேலும் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து, அவர்களது மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சுயேட்சை வேட்பாளர் ஒச்சாத்தேவர் மகனான பன்னீர்செல்வத்துக்கு
வாளி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வத்துக்கு கண்ணாடி டம்ளர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கங்கைகொண்டானை சேர்ந்த மலையாண்டி மகன் பன்னீர்செல்வத்துக்கு பட்டாணி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு திராட்சை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வத்துக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.