தனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள கோரி இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு.!

இடைக்கால அதிமுக பொதுச்செயலாளர் என்கிற முறையில் தனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையீட்டு மனுவை அளித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்து அதன்படி செயலாற்றி வருகின்றனர். திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரை களம் இறக்கி உள்ளது. அதன்படி, மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேராவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான இ.வி.கே.எஸ்.இளங்கோவன் திமுக கட்சி கூட்டணி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

அதேபோல அதிமுக தரப்பு என்ன செய்யும் என்ன அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கையில், அதிமுக தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என இரு பிரிவுகளாக இருக்கிறது. இரு பிரிவுகளும் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இதனால் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற நிலை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இதனை தீர்க்க தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஓர் மனு ஒன்றை அளித்து இருந்தது. இந்த மனுவை திங்கட்கிழமை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

அதாவது அதிமுக கட்சி பொதுக்கூட்டத்தில் தான் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக, தனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கெனவே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையேயான அதிமுக பொதுக்குழு செல்லுமா செல்லாதா எனும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் இந்த மனு மீதான இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தால் இதனை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கு குறித்த பதில் மனுவை தேர்தல் ஆணையம் விரைவில் வழங்க வேண்டும் எனவும், தேர்தல் நெருங்குவதால் தாமதப்படுத்தாமல் உடனடியாக பதில் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment