காஷ்மீருக்கு வர தயார்!விமானம் தேவையில்லை-காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி பதில்

சுதந்திரத்தை ஏற்படுத்தி தந்தால் காஷ்மீருக்கு வர தயார் என்று  காஷ்மீர் ஆளுநர் அழைப்புக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் கடந்த சில நாட்களாக சூட்டை கிளப்பி வருகிறது.மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று அறிவித்த உடனே மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஒருவழியாக மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பான மசோதா நிறைவேற்றம்  செய்யப்பட்டது. பின்னர் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் தெரிவித்து விட்டார்.

இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர்,லடாக் !அக்டோபர் 31 -ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது சட்டம்

காஷ்மீர் விவகாரத்தில் முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  ஆனால்  காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது  செய்யப்பட்ட விவகாரம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தான் காஷ்மீருக்கு நிலைமையை அறியச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ,கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோரை ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதே நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ‘காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி  வருகின்றது. இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ராகுலின் இந்த கருத்துக்கு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் பதில் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், ராகுல் காந்தி காஷ்மீருக்கு வரவேண்டும் என்று நான் அழைப்புவிடுக்கிறேன்.ராகுல்  காஷ்மீருக்கு வருவதற்காக நானே  விமானம்  அனுப்பி வைக்கிறேன் .இங்கு வந்து களத்தைப் பார்த்துவிட்டு பின்னர் அதுகுறித்து பேசவேண்டும். நீங்கள் ஒரு பொறுப்பான தலைவர் என்பதை உணர வேண்டும் . இதுபோன்று நீங்கள் பேசக்கூடாது என்றும் தெரிவித்தார்.


தற்போது காஷ்மீர் ஆளுநரின் அழைப்புக்கு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அவரது பதிவில் ,எதிர்க்கட்சி தலைவர் மற்றும் நான் அடங்கிய குழுவினர்,ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக்கை பார்க்க வருகிறேன்.ஆனால்  எங்களுக்கு விமானம் தேவையில்லை. ஆனால், சுதந்திரமாக பயணித்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்க அனுமதிக்க   வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.