தி.மு.க. ஏமாற்றியது – சட்டப்பேரவையில் முதல்வர் ஆவேசம்

தமிழக சட்டசபையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின், 5 ஆண்டுக்குள் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்று சொன்னீர்கள். எத்தனை விவசாயிகளுக்கு கொடுத்து இருக்கிறீர்கள்? எங்கே கொடுத்தீர்கள்? எத்தனை விவசாயிகள் பயன்பெற்று இருக்கிறார்கள்? என்று ஆவேசமாக கேட்டார். 

இதையடுத்து தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்ற போது படிப்படியாக தான் எல்லாமே செய்ய முடியும். பின்னர் குறிப்பிட்ட காலத்திலேயே எல்லாவற்றையும் செய்திட முடியாது. ஒரு திட்டம் என்று சொன்னால், அதனை அறிவிக்கின்ற போது படிப்படியாக தான் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும் மதுக் கடைகள் படிப்படியாக தான் குறைக்கப்படும் என்று சொல்லி இருக்கின்றார். நாங்கள் குறைத்துக்கொண்டும் இருக்கிறோம் என தெரிவித்தார். உங்களுடைய தலைவர் எப்படி எல்லாம் பேசியிருக்கின்றார் என்ற எல்லா குறிப்புகளும் எங்களிடம் இருக்கிறது. 

எல்லோரும் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இன்றைக்கு பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறீர்கள். படிப்படியாக தான் அதை செயல்படுத்த முடியும். கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அரசு கவனமாக இருந்து, அதை பின்பற்றி படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்ற செய்தியை சொல்லி இருக்கின்றது என்று குறிப்பிட்டார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்