திருச்சியில் ஜே.பி.நட்டா பேரணிக்கு அனுமதி மறுப்பு!

Election2024: திருச்சியில் நாளை நடைபெற இருந்த பாஜக பேரணிக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வர உள்ளனர்.

இந்த நிலையில், திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாளை நடைபெற இருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த பாஜக அனுமதி கோரியிருந்தது. ஆனால், சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை காரணம் காட்டி, காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலர் அனுமதி மறுப்பு தெரிவித்தனர்.

இதனால், ரோடுஷோ நடத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்கும்படி பாஜகவை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 36 மணி நேரத்துக்கு முன்பாக ஆன்லைனில் அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்