தமிழகத்தில் டெங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் டெங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் உள்ள செட்டி தோட்டம் பகுதியில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்போது மக்களுக்கு டெங்கு கொசு பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கியுள்ளார்.

அதன் பின்பு அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது கூறிய அமைச்சர், முதல்வரின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 2,930 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  கொரோனா தொற்று நோய் பரவல் முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கையால் வெகுவாக குறைந்து உள்ள நிலையில், தற்போது பருவமழை காரணமாக பரவி வரும் டெங்கு கொசுவை ஒழிக்க முதல்வரின் அறிவுறுத்தலின் படி தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal