கெஜ்ரிவாலை பதவி நீக்கக்கோரி மனு.. கடும் அபராதம் விதிக்கப்படும் – டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை

Arvind Kejriwal: கெஜ்ரிவாலை பதவி நீக்கக்கோரிய மனுதாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை.

கடந்த மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதன்பின் நீதிமன்றம் அனுமதியுடன் ஒருவாரமாக அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.

இதையடுத்து முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் உள்ள  2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் நீக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.  சுர்ஜித் சிங் யாதவ் மற்றும் விஷ்ணு குப்தா ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது.

இதனைத்தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சந்தீப் குமார் என்பவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுதாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்