“கவிஞர் பிறைசூடன் மறைவு;தமிழ்த் திரையுலகத்திற்கே ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு” – சீமான் கண்ணீர் வணக்கம்..!

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடனின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (65 வயது) உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

இதனையடுத்து,தமிழக முதல்வர் ஸ்டாலின்,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,திரைத்துறையினர் மற்றும் மக்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.இதனையடுத்து,இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில்,கவிஞர் பிறைசூடனின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“எண்ணற்ற இன்னிசைப்பாடல்களால் மக்களின் மனங்களை மகிழச்செய்த திரையிசைப்பாடலாசிரியரும், கவிஞருமான ஐயா பிறைசூடன் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

எளிய மொழி நடையில் திரையிசைப் பாடல்களை மனம் கவரும் வகையில் வடித்துத்தந்த மாபெரும் வித்தகர். தனக்கென திரையுலகில் தனியிடத்தைப் பிடித்து, காலங்கடந்தும் நிலைத்து நிற்கும் பாடல்களை இயற்றிய ஐயா பிறைசூடன் அவர்களது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கே ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு. கண்ணீர் வணக்கம்”,என்று தெரிவித்துள்ளார்.