பயிர்க்கடன் தள்ளுபடி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.!

பயிர் கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இது விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட, கடன் தள்ளுபடி 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தேர்தல் பரப்புரையில் போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரூ.12,110.74 கோடி பயிர் கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், விவசாயிகளால் பெறப்பட்டு, ஜனவரி 31 வரை நிலுவையில் இருந்த பயிர் கடன், வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்டா, பட்டாவுடன் குறிப்பிட்ட நிலத்தில் பயிர் செய்ய நகையீட்டின் பெயரில் பெறப்பட்ட தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும், வேளாண்மை சாராத இனங்களுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. பயிர் கடன்களுக்காக மானியம் பெற்றிருந்தால் எஞ்சிய தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளனர். குற்ற நடவடிக்கை, நிதி முறைகேடுகளுக்கு உள்ளான இனங்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டதற்கான ரசீதை விவசாயிகளுக்கு நாளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்