#Breaking: “மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய தடை”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்தாண்டு ஏப்ரல் 19-ம் தேதி மருத்துவர் சைமன் காலமானார். அவரின் உடலை மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த வருடம் ஏப்ரல் 19-ம் தேதி காலமானார். இதையடுத்து அவரின் உடலை மயானத்தில் புதைக்க இரண்டு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், காவல்துறையின் பாதுகாப்போடு, அவரது உடல் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது.

மேலும், சைமனின் உடலை கீழ்பாக்கம் சிமெட்ரிஸ் போர்டு என்ற தனியார் கல்லறை இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்தனர். ஆனால், தனியார் கல்லறை நிர்வாகம் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்துவிட்ட நிலையில், சைமன் உடலை தோண்டி எடுத்து அந்த கல்லறையில் அடக்கம் செய்ய அண்மையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றதின் உத்தரவை எதிர்த்து மாநகராட்சி ஆணையர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கொரோனாவால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது சாத்தியமல்ல என நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்தது. மாநகராட்சி விளக்கத்தை ஏற்று, மருத்துவர் சைமனின் உடலை மறு அடக்கம் செய்யும் தனி நீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.