நேற்று டெல்லியில் ஆலோசனை.! இன்று கோவையில் தூய்மை பணி.! நிர்மலா சீதாராமனின் அடுத்தடுத்த நகர்வுகள்.! 

பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று மத்திய அரசு “தூய்மை பாரதம் (Swachh Bharat)” எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் காலை 10 மணி முதல் 11 மணி வரையில் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மை செய்ய வேண்டும் என அறைகூவல் விடுத்து இருந்தார்.

மேலும், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, விளையாட்டு வீரர் அங்கித் பையனுடன் சேர்ந்து சுத்தம் செய்தார். இந்த தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் பிரதமர் வேண்டுகோளுக்கினங்க மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத்,  மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே  , என பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.

அதே போல் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்துள்ளார். இன்று காலை, கோவை பீளமேடு பகுதியில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தெருக்களை சுத்தம் செய்தார். பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களில் மாநில அரசு சார்பில் அக்டோபர் 1 தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தெருக்களை சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் இம்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து கோவை கொடிசியா மைதானத்தில் மத்திய அரசின் கடனுதவி திட்டத்தின் கீழ் இன்று 3,749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் விழாவில் கலந்துகொள்ள உள்ளார். தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என பல்வேறு வங்கிகள் மூலம் இந்த கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நிகழ்வில் கோவையில் இருந்து 948 வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கப்பட உள்ளன.

நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசனை நிகழ்த்தினார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் நேற்று முன்தினம் டெல்லி சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார். நேற்று முன்தினம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த அண்ணாமலை , நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தனது விளக்கத்தை அளித்தார்.

இந்த சந்திப்பை அடுத்து, அண்ணாமலையிடம் கேட்டறிந்த விளக்கங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷாவிடம் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.