தனி சின்னத்தில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டி – மாநில செயலாளர் முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனி சின்னத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனி சின்னத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும். நாங்கள் கேட்பது மற்றும் கூட்டணி ஒதுக்கும் தொகுதிகள் பற்றி கலந்தாலோசித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பது சில தேசிய கட்சிகளின் விருப்பம். ரஜினியின் ஆரோக்கியத்தையும், அவர் நடிக்க வேண்டும் என்பதையே ரசிகர்களும், மக்களும் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக, காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. புதுச்சேரி உட்பட 39 இடங்களில் வெற்றியைப் பெற்றது. ஆனால், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் நூலிழையில் வெற்றியை இழந்தது திமுக. இதனால், இந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான இடங்களை ஒதுக்கவிருப்பதாகவும், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகின. இதனையடுத்து, மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்திருந்தன. தற்போது, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்