#Breaking:நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு – இன்று உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு விசாரணை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர்.

இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் தலைமைக் கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ள நிலையில் ஆளுநர் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பரபரப்பான சூழலில்,சிவசேனா கட்சியின் தலைமைக் கொறடா சுனில் பிரபு தொடர்ந்த வழக்கை,அவசர வழக்காக கருதி இன்று மாலை 5 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

இதற்கிடையில்,மகாராஷ்டிர மாநில அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநிலத்தில் முகாமிட்டிருந்த நிலையில்,இன்று கோவா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக,கோவா சென்று அங்கு தாஜ் ஹோட்டலில் தங்கி விட்டு,அதன்பின்னர் நாளை மும்பை செல்ல திட்டமிட்டுள்ளதாகவும்,இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிரா சட்டப்பேரவை சென்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Comment