புயல் கட்டுபாட்டு அறையை நேரில் பார்வையிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி..!

யாஸ் புயலின் காரணமாக எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிய,புயல் கட்டுபாட்டு அறையை முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் பார்வையிட்டார். 

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசாவின் பாலசோர் பகுதியிலிருந்து மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடந்து கொண்டிருக்கிறது.

இருப்பினும்,புயல் கரையைக் கடப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசிக் கொண்டிருக்கிறது.இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன,பல இடங்களில் மரங்கள் முறிந்துள்ளன.மேலும்,பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளித்தும் காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,கன மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு,கடல்நீர் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இருப்பினும்,முன்னதாகவே ஒடிசாவில் இரண்டு லட்சம் பேரும்,மேற்கு வங்கத்தில் 11.5 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,மேற்கு வங்கத்தின் நப்பனாப் பகுதியில் அமைந்துள்ள புயல் கட்டுப்பாட்டு அறையை நேரில் பார்வையிட்டார்.அங்கு,புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.