இலங்கையின் இத்தகைய அடாவடிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் – டிடிவி தினகரன்

வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் வாடும் இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட். 

இலங்கை கடற்படையினர் கடந்த சில காலமாகவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.

இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 போரையும் மே 12-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமனஞ் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை பிணையில் விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடியை செலுத்த உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடரும் இலங்கையின் இத்தகைய அடாவடிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் படும் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் வாடும் இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.