செல்போன்கள் தான் நாட்டில் நடைபெறும் பல குற்றங்களுக்கு மூல காரணம்!

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாட்டில் நடைபெறும் பல குற்றங்களுக்கு செல்போன்கள்தான் மூல காரணமாக உள்ளன என்று  வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து இண்டஸ் டவர்ஸ் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்யநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘செல்போன் கோபுரம் அமைக்க அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறாவிட்டால், அந்த நிறுவனம் அனைத்து ஆவணங்களுடனும் ஒரு மாதத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

மேலும், “செல்போன் கதிர் வீச்சு உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கிறதோ இல்லையோ? குடும்பத்தினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு இடைவெளியை ஏற்படுத்த காரணமாக உள்ளது. தற்போது நாட்டில் 99 சதவீதம் பேர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர்.

கர்ணனின் கவச குண்டலம் போல செல்போன்கள் மக்களின் அங்கமாகி விட்டது. அதேபோல நாட்டில் இன்று நடைபெறும் பல குற்ற சம்பவங்களுக்கும் செல்போன்கள்தான் மூல காரணமாக உள்ளன’’ என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment